இரண்டு பக்கமும் பூவரச மரங்களும் மருத மரங்களும் நின்றிருக்கும் செம்மண் சாலை. தாமிரபரணியின் வாசத்தைச் சுமந்துவந்து என்னைத் தழுவி ஆசுவாசப்படுத்திச் செல்கிறது காற்று. இரவு கவியத் தொடங்கும் மாலையின் பின்பொழுதில் அந்தச் சாலையில் வந்துபோன நாள்கள் மனதுள் படுவேகமாகத் தோன்றி மறைகிறது. சாலைக்குக் குறுக்காக ஓடும் ஓடையைக் கடக்க உதவும் சிறிய பாலத்தில் நின்று கொண்டு தூரத்தில் ஓடும் ஆறை மானசீகமாகப் பார்க்கிறேன். தூரத்தில் ஆற்றில் குளித்துவிட்டு வரும் ஒன்றிரண்டு மனிதர்களில் சீனிவாசராவின் உருவம் தெரிகிறது. சீனிவாசராவ் என்னைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கிறேன். அவரின் நடையில் வேகம் கூடியது போன்று தோன்றியது. சீனிவாசராவைத் தவிர்க்க முடியாது. ஒரு வார்த்தையாவது பேசியே ஆகவேண்டும்.
அவர் சீனிவாசராவா வேறு யாரோவா?
அந்தச் சிறிய வெள்ளைப் பாலத்தின் மீது காகங்களும் குருவிகளும் எச்சங்கள் இட்டிருக்கின்றன. எச்சமில்லாத ஓரிடம் பார்த்து அமர்கிறேன்.
காகங்கள் பித்ருக்கள். நேற்று அப்பாவின் திதிக்கு வந்திருந்த ஆச்சார் அப்படித்தான் சொன்னார்.
அப்பாவின் நினைவை நான் மேலெழும்ப விடுவதேயில்லை. அப்பாவுக்கும் எனக்கும் பின்னப்பட்டிருந்த இழை என்றோ அறுந்துவிட்டது. அப்படி ஒரு இழை இருந்ததாகக் கூட நினைவில்லை. அப்பாவின் சிரித்த கோலத்தை நினைவில் கொண்டுவர முயன்றதில் ஒருமுறைகூட வென்றதில்லை. அவருக்கு எதற்கு வேண்டுமானாலும் கோபம் வரும். யாரிடம் வேண்டுமானாலும் கோபம் வரும். அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வது வெகு அபூர்வம். அதற்காக அம்மா அதிகம் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அப்பா இறந்த அன்று அம்மா ஒரே ஒரு தடவை அழுதாள். அப்பாவைத் தூக்கிக்கொண்டு போகும்போது அழாதவள் எல்லாக் காரியமும் முடிந்து நான் திரும்பி வீட்டிற்கு வந்தபோது என்னைப் பார்த்து அழுதாள்.
சத்தமேயில்லாத அழுகை. அவளை நேருக்கு நேராகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே அவள் அழுகிறாள் என்று தெரியும் வகையான அழுகை. அந்த அழுகைக்குப்பின் அப்பாவிற்காக அம்மா அழவேயில்லை.
ஆனால் சீனிவாசராவ் எனக்கும் அப்பாவிற்குமிடையே பலமான ஒரு இழை இருந்ததாகப் பாவித்துக்கொண்டு அதை மேலும் மேலும் பலமுள்ளதாக்குவார். மிகுந்த பிரயாசைப்பட்டே நான் தப்பிக்கவேண்டியிருக்கும்.
நீரில்லாமல் கருத்துப்போய் சாக்கடையாகத் தேங்கிக் கிடக்கும் ஓடையில் வீசப்பட்டிருந்த இலைகளுக்காகப் பன்றிகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. என் கையிலிருந்த தர்ப்பைப் புல்லையும் காய்ந்துபோன பூ ஆரத்தையும் தூக்கி வீசி எறிந்தேன். ஆற்றில்தான் எறியவேண்டும் என்ற அம்மாவின் பிடிவாதமும் எனது சோம்பேறித்தனும் ஓடையில் முடிந்தன.
எனக்குக் கல்யாணம் ஆகும்வரை அப்பாவுடன் கோபம் வரும்போதெல்லாம் என் மனதளவில் நான் தோற்பேன். அப்போதெல்லாம் வெட்கம் பிடுங்கித் தின்னும். வெளியில் உரக்க ஜம்பம் பேசினாலும் ஒரு எல்லைக்கு மேல் அப்பாவை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத்தனம் என்னை உந்தும். எங்கேயாவது ஆளில்லாத ஒரு தனிமைக்குள் ஓடி ஒளிந்துகொள்ளத்தோன்றும். அப்போது என் கால்கள் இந்தச் செம்மண் சாலையைத் தேடி நடக்கும்.
இந்தப் பாலம்தான் என் சுமைதாங்கி. இங்கிருந்தபடி என் மூர்க்கமான மனதை அலையவிடுவேன். பல இடங்களில் சென்று மோதும். எகிறிக் குதிக்கும். பின் சாந்தமடையும். சாந்தமடையாமல் மேலும் தோற்கும் தருவாயில் அதற்குத் தூக்கு மாட்டி தற்கொலை செய்துவைப்பேன்.
தாமிரபரணியில் சென்று சிறிது நேரம் உட்கார்ந்து ஆற்றின் சலனத்துடன் கூடிய அமைதியை உள்வாங்கிக்கொண்டிருப்பேன். ஓடும் ஆறு என் மன உளைச்சல்களை, நிச்சலனங்களைக் கரைத்துக்கொண்டு ஓடும். ஆற்றில் மூழ்கி எழுந்திருக்கும்போது அப்போதைக்கு ஒரு புது உலகம் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.
என் கல்யாணத்திற்குப்பின் தாமிரபரணியின் தேவை குறைந்தது. வெகு சில அசந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தச் சாலையும் இந்தப் பாலமும் ஆறும் எனக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. நேற்று அப்பாவின் திதி தந்த அவரது நினைவு இன்று என்னை இங்கு விரட்டியிருக்கலாம் அப்பாவிடமிருந்து நான் எத்தனை வேகமாக விலகுகிறேனோ அத்தனை வேகமாக ஏதோ ஒன்று என்னை அவரை நோக்கித் தள்ளுகிறது.
காகம் ஒன்று படபடத்துப் பறக்கிறது. அது அப்பாவாக இருக்கலாம் என்று எண்ணும்போது சீனிவாசராவ் மிகச் சமீபத்துவிட்டிருந்தார்.
“என்னடா இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்க?”
சீனிவாசராவும் நானும் தமிழில்தான் பேசிக்கொள்வோம். மற்ற ராவுஜிக்களைப் போல வலிய வலிய கன்னடம் பேசமாட்டார். அவரின் பேச்சை நான் அதிகம் சிரத்தையோடு கவனிப்பதில்லை என்பதை அவரும் ஓரளவிற்கு அறிவார். ஆனாலும் காணும்போதெல்லாம் ஒருவார்த்தையாவது பேசாமல் போகமாட்டார்.
“அப்பா திதி முடிஞ்சிருச்சா”
“ம். நீங்க நல்லா இருக்கீங்களா”
“ஏதோ இருக்கேன். வாயேன் நடந்துக்கிட்டே பேசலாம். நீயும் வீட்டுக்குத்தானே போகப்போற?”
சீனிவாசராவுடன் போவதில் எனக்கு அதிக இஷ்டமில்லை. இன்னும் சிறுதுநேரம் காகங்களையும் காற்றில் ஆடும் மரங்களையும் நன்கு கவிந்துவிட்ட இருளையும் பழக விரும்பினேன். அவரைப் போகச் சொல்லிப் பார்த்தேன். அவர் விடுவதாக இல்லை. வேறுவழியில்லாமல் நானும் கிளம்பினேன். அவரும் என்னுடன் பாலத்தில் அமர்ந்துவிட்டால் சுலபத்தில் தப்பிக்கவே முடியாது என்கிற பயமும் ஒரு காரணம்.
வழியெங்கும் நொங்கின் மேல் பாகம் வெட்டப்பட்டுச் சிதறிக் கிடக்கிறது. பதனீர் குடித்துவிட்டு தூக்கி எறியப்பட்ட பனை ஓலைகள் சாலையெங்கும் பரவிக்கிடக்கின்றன. சீனிவாசராவின் தொடர் பேச்சுக்கு அவ்வப்போது காது கொடுத்துக்கொள்கிறேன். என்னையறியாமல் ஒருபுறம் கேட்கவும் இன்னொருபுறம் சுற்றுப்புறத்தை உற்று நோக்கவும் இரண்டிற்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் சஞ்சரித்து மீள்கிறேன்.
“உங்க அப்பாவுக்குப் பதனீர்னா அப்படி ஒரு இஷ்டம். எத்தன தடவ இங்க வந்து குடிச்சிருக்கோம். டம்ளர்ல குடிக்கமாட்டான். பனை ஓலைலதான் குடிப்பான். அதுதான் அவனுக்குப் பிடிக்கும்”
முன்பெல்லாம் எனக்கும் பதனீர் இஷ்டமாக இருந்தது. அப்பாவிற்குப் பிடிக்கும் என்று தெரிந்தகணத்தில் பதனீரை வெறுத்துவிட்டிருந்தேன். இவர் அப்பாவிற்குப் பதனீர் மிகப் பிடிக்கும் என்று உறுதிப்படுத்துகிறார். எது எனக்குப் பிடிக்குமென்று என்றாவது அப்பா கேட்டிருக்கிறாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
எண்ணெய் போடாத சைக்கிள் ஒன்றில் சத்தம் எழுப்பியபடி ஒருவன் கடந்து போகிறான். அந்தச் சத்தம் எனக்குப் புல்லரிப்பை ஏற்படுத்துகின்றது. பல்லைக் கடித்து உள்ளங்கைகளை முறுக்கிபுல்லரிப்பைக் கட்டுப்படுத்துகிறேன். அப்பாவிற்கும் இதுபோலவே சில சத்தங்கள் விரும்பத்தகாத புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்குமோ என்கிற எண்ணம் பெரும் பீதி தருவதாக இருந்தது.
சீனிவாசராவ் பேசிக்கொண்டிருக்கிறார்.
“உங்க அப்பனுக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. ஓட்டப் பழகும்போது ஒரு தடவ கீழ விழுந்து கால்ல நல்ல அடி. அதுலேர்ந்து சைக்கிள் பக்கத்துலயே வரல அவன். ஆளும் கொஞ்சம் குள்ளமா! உன் உயரம்தான் இருப்பான். கால் சரியா எட்டலை. அதுலேர்ந்து சைக்கிளே ஓட்டமாட்டான்”
எனக்கு சைக்கிள் நன்றாக ஓட்டவரும் என்பது ஆசுவாசம் தந்தது. என் உயரமும் என் அப்பாவின் உயரமும் ஒரே அளவு என்று சீனிவாசராவ் சொல்வது எரிச்சல் ஏற்படுத்தியது. சீனிவாசராவ் அப்பாவை விட்டுவிட்டு வேறு எதாவது பேசினால் நல்லது. சொல்லிவிடலாமா?
அருணகிரி தியேட்டரைக் கடந்து தெற்குபுதுத் தெருவுக்குள் நுழைகிறோம். தியேட்டருக்குச் சிலர் வேகவேகமாக நடக்கிறார்கள். எனக்கென்னவோ படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வமிருக்கவில்லை.
“உங்க அப்பாவுக்குப் படம்னாலே ஆகாது. தியேட்டர்ல எத்தனை படம் பார்த்திருப்பான்னு நினைக்கிறே?”
அப்பாவிற்குப் படம் பிடிக்காது என்று சொல்லாத அம்மாவை நினைத்துக் கோபம் கொண்டேன். அப்பாவின் குணநலன்கள் என்னுள் இருப்பதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்தச் சீனிவாசராவின் வீடு எங்கே இருக்கிறது? எப்போது போவார்?
“மாமா உங்க வீடு எங்க இருக்கு?”
“மறந்துட்டியா? ஒருதடவை வந்திருக்கியே. சுடலைமாடன் கோவில் தெருவில.. ஜெராக்ஸ் கடைக்குப் பக்கத்துல.. மறந்துட்டியா? இட்லி மாவு விற்கப்படும்னு ஒரு போர்டு போட்டிருக்குமே.. இப்ப வேணா வாயேன்”
“வந்திருக்கேனோ.. சரியா ஞாபகமில்லை”
“உங்கப்பாவும் இப்படித்தான். எதை மறக்கிறதுன்னு கணக்கே இல்லை. எதை வேணா மறப்பான்” சொல்லிவிட்டு வெகுவாகச் சிரித்தார். எனக்குள் கோபம் சூழ்ந்தது. ஆனாலும் தன்னை மறந்து சிரிக்கும் அவரது இரசனையான சிரிப்பை நிறுத்த மனம் வரவில்லை. சீனிவாசராவ் சிரிக்கும்போதே அவரது குழந்தைத்தனம் வெளிவந்துவிடும்.
வாகையடிமுக்கு வந்துவிட்டிருந்தோம். திருவள்ளுவர் சிலை அழுக்கப்பி தூசி படித்து கிடக்கிறது. இப்படிக் கவனிப்பாரற்ற சிலைகளைக் காணும்போதெல்லாம் வருத்தம் வரும்.
“சிலையைப் பார்க்கும்போது ஞாபகம் வருது. உங்கப்பாவுக்குச் சிலைன்னாலே இஷ்டமில்லை. சிலை அகற்றும் போராட்டம்னு தனியாளா கூத்தடிச்சான். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனான். போலீஸ்ல மிரட்டி விட்டுட்டாங்க”
சீனிவாசராவ் என் பொறுமைக் கோட்டைக் கடக்கச் செய்யாமல் போகமாட்டார் என்று நினைத்துக்கொண்டேன். இனியும் எதையாவது சொல்லிக்கொண்டிருந்தால் என்னால் சும்மாயிருக்கமுடியாது. பொறுமை இழந்து அவரைப் பார்க்கிறேன். பூணூல் தனது நிறத்தை இழந்து கருப்புக்கோடாக மார்பில் கிடக்கிறது. தொங்கிப் போன மார்பிலும் நெற்றியிலும் ஒட்டிப் போன வயிற்றிலும் நாமக்கீற்றுகள் தென்படுகின்றன. அவரது முகம் எப்போதும் லேசான சிரிப்பை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதில் நிரம்பியிருக்கும் வாத்சல்யமும் அவரது வயதும் தோற்றமும் எப்போதும் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பும் என் கோபத்தைப் புறக்கணித்து என்னுள் மரியாதையைத் திணிக்கின்றன.
சந்திப்பிள்ளையார் கோவில்வரை வந்தாகிவிட்டது. டவுண் பஸ்கள் சீறிப் பாய்ந்து எங்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பஸ் கடக்கும்போதும் சீனிவாசராவ் நின்று நிதானித்து, பஸ் போனபின் என்னுடன் நடக்கிறார். என் கோபத்தின் சுவடு அவருக்குப் புலப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சிறிதுநேரம் அமைதியாக இருந்தார்.
திடீரென “என்னை நம்பி வீட்டுல பொண்டாட்டியும் நாலும் பொண்ணுங்களும் இருக்கு” என்று சொல்லி வெகுளியாகச் சிரித்தார். அவரால் அமைதியாக இருக்கமுடியாது என்று தோன்றியது. என் மனதுள் அவரைப் பற்றிய ஒரு இரக்கம் சூழ்ந்தது. நானும் லேசாகச் சிரித்தேன்.
“இவ்வளவு வந்தாச்சு. வீட்டுக்கும் வாயேன்”
“இல்ல மாமா இன்னொரு நாள்”
“சரி வா. போத்திக் கடைல ஒரு காபி சாப்பிட்டுட்டுப் போகலாம். வேண்டாம்னு சொல்லாத. எனக்காக வா”
போத்தி கடையில் கூட்டம் அதிகமில்லை. ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். சீனிவாசராவ் இருவருக்கும் காபி சொன்னார்.
“போத்திக் கடை காபின்னா அப்பல்லாம் அவ்வளவு பிரசித்தம். காலேல அஞ்சு மணிக்கெல்லாம் அப்படி ஒரு கூட்டம் வரும். உங்க அப்பாவுக்கு காலேல ஒரு காபியும் உளுந்தவடையும் சாப்பிடலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்”
நான் சர்வரைக் கூப்பிட்டு காபி வேண்டாம் என்று சொல்லி டீ சொன்னேன். சீனிவாசராவ் ஏதோ ஒரு தெலுங்கு கீர்த்தனையை வாய்க்குள் முனகினார். “உங்க அப்பா நன்னா பாடுவார்” என்று அவர் ஆரம்பிக்காமல் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். போத்திக்கடை முழுக்க கடவுள் படங்களாக இருந்தது. கதை வைத்த ஆஞ்சநேயரும் ராகவேந்திரரும் ராமர் பட்டாபிஷகமும் மத்வாச்சாரியாரும்…
“உங்க அப்பாவுக்குத் தெய்வ நம்பிக்கையே இல்லை தெரியுமோ”
சீனிவாசராவை உற்றுப் பார்த்தேன். என்னைக் கவனிக்காமல் அவர் டீயை ஆற்றிக்கொண்டே சொன்னார்.
“ஆரம்ப காலத்துல உங்க அப்பாவுக்குத் தெய்வ நம்பிக்கையே கிடையாதுடா. அதுலதான் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிறைய பிரச்சனை. ஒரு காலத்துல உங்க அப்பா தெய்வ நிந்தனை போராட்டம்லாம் கலந்துக்குவாரன். உங்க அம்மா சொன்னாலும் கேக்கமாட்டான்”
என்னைப் பெரும் கலவரம் பற்றிக்கொண்டது. எனக்கும் அதிகம் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அப்பா அளவு போராட்டம் என்றெல்லாம் சென்றதில்லை.
“ஒங்கப்பாவுக்கு கண்ணு மண்ணு தெரியாம கோவம் வரும். உங்க அம்மாவை ரெண்டு மூணு தடவை அடிச்சிருக்கான்”
மிக அதிகம் கோபப்பட்ட ஒரு நிலையில் பாருவை அடிக்க கை ஓங்கியிருக்கிறேன். இத்தனை நாள் எனக்கும் அப்பாவுக்கும் சம்பந்தமேயில்லை என நான் நினைத்ததெல்லாம் எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட பிரமையோ? அப்பாவின் சாயல் என் மீது அப்படியே படிந்து போயிருக்கிறதோ? பார்த்து பார்த்து விலகிக்கொண்டாலும் ஒட்டிக்கொண்டே வருமோ? சீனிவாசராவைப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ? சுற்றிலும் அப்பாவின் பல பிம்பங்கள் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன.
“உங்க அப்பா முன்னாடி யாரும் வாதம் செய்யமுடியாது. உங்க அப்பா எப்பவாவதுதான் பேசுவான். ஆனா முத்துத் தெறிச்சாப்புல இருக்கும். அதுக்குப் பதில் சொல்றதுக்குள்ளயே எதிராளிக்குத் தாவு தீர்ந்திடும். அதிகம் பேசமாட்டாரன். ஒன்ன மாதிரிதான்” நுரையோடு டீயைச் சூப்பினார்.
“இன்னொன்னும் சொல்லணும். சில விஷயங்கள்ல அப்படியே உன் ரூபத்துல ஒங்க அப்பாவைப் பார்க்கிறேன். எதிராளி பேசும்போது அவன் கவனம் வேற எங்கயாவது இருக்கும். அதனால பேச்சைக் கவனிக்கிலைன்னு இல்லை. அதையும் கவனிப்பான்”
வெகுவேகமாக என் அப்பா சிரித்துக்கொண்டே, என் எதிர்ப்பையும் மீறி, வெறியான அத்துமீறலுடன் என்னுள்ளே நுழைந்துகொண்டார். மிகுந்த பிரயாசைப்பட்டு என் அப்பாவைப் பிய்த்து வெளிய எறிய முயல்கிறேன். அப்பாவின் குரூரமான சிரிப்பு மட்டுமே எங்கும் எதிரொலிக்கிறது.
என் அப்பாவை என்னால் அடக்கமுடியவில்லை.
சீனிவாசராவ் டீயைக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்துவிட்டு கவுண்ட்டருக்குச் சென்றார். காசை அவரே கொடுத்தார். போத்தியிடமிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வந்தார்.
“ஆத்துக்குக் குளிக்கப் போகும்போது போத்திகிட்ட கொடுத்துட்டுப் போயிருந்தேன். வர்ற வழில ஒன்னைப் பார்த்தேன். நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். உங்கப்பாவுக்கு கடைசி காலத்துல சாமிமேல நம்பிக்கை வந்திருச்சு தெரியுமோ”, என்றவர், “ஏன்னு நினைக்கிறே?” என்று கேட்டுக்கொண்டே மஞ்சள் பையைப் பிரித்து உள்ளிருந்து ஒரு சிறிய பிள்ளையார் சிலையன்றை எடுத்தார். அதன் மேலே நிறைய அருகம்புல் ஒட்டியிருந்தது.
“இந்த மூலிகைப் பிள்ளையார்தான் காரணம். இது சாதாரண பிள்ளையார் இல்ல. மூலிகையிலயே செஞ்சது. இதை அவன் கும்பிட ஆரம்பிச்சதும்தான் அவன் நினைச்சது நிறைய நடந்ததுன்னு சொல்லியிருக்கான். நீயும் ஒண்ணு வாங்கிப் பாரேன். நாப்பது ரூபா. எனக்குக் கமிஷன் அதனால சொல்றேன்னு நினைச்சிடாத. ஒங்கப்பன் அப்படித்தான் சொல்வான். அதுக்காகவே என்கிட்ட வாங்காம வேற யார் கிட்டயோ வாங்கினான். ஒனக்கு தெய்வ நம்பிக்கையுண்டு, அதனால சொல்றேன். காசு இப்ப கைல இல்லைன்னா பரவாயில்லை. வீட்டுக்கு வந்து வாங்கிக்கறேன்”
எனக்குள் இருந்த அப்பா “சீனிவாசராவ் கமிஷனுக்காகச் சொல்கிறான் வாங்காதே” என்றார்.
என் அப்பாவைத் தூரத் தள்ளி, அந்தப் பிள்ளையார் சிலையை வாங்கிக்கொண்டேன்.
சீனிவாசராவ் சொன்னார், “இந்த விஷயத்துல ஒங்கப்பன் மாதிரியில்லை. ஒனக்கு யோசிக்கத் தெரிஞ்சிருக்கு”.
அப்பா “துரோகி” எனக் கத்திக்கொண்டே இரண்டு கைகளால் என் நெஞ்சில் ஓங்கி ஓங்கிக் குத்தினார்.