தினமணியின் தீபாவளி மலரில் எனக்குத் தேவையில்லாத மற்றும் ஆர்வமில்லாத விளம்பரங்கள், ஆன்மீகத்தலங்கள் பற்றிய கட்டுரைகள், முகப்பரு வராமல் தடுக்க அலோசனைகள், மாடலிங் ரோஜாக்கள் பற்றிய கட்டுரை, ஸ்நேகா மற்றும் பிரகாஷ்ராஜ் பேட்டி, விவேக்கிற்குப் பிடித்த காமெடிக்காட்சிகள் உள்ளிட்ட பலதை நீக்கியபின்பு, புத்தகத்தின் 20/- ரூபாய் மதிப்பில் ஐந்து ரூபாய் மட்டுமே எஞ்சியது போன்ற தோற்றம். அந்த ஐந்து ரூபாய் மதிப்பையும் மதிப்பிற்குரியதாக்கியவை ஜெயகாந்தனின் பேட்டியும் கணபதி ஸ்தபதியின் (என் கற்பனைக்கு எட்டாத, புரிந்துகொள்ள முடியாத!!!) பேட்டியும் ஆ.ரா.வேங்கடாசலபதியின் “பாரதி எழுதத்தவறிய எட்டையபுரம் வரலாறு” கட்டுரையும்.
ஜெயகாந்தன் 2000-ம் ஆண்டு தினமணியின் தீபாவளி மலருக்காக விரிவாகப் பேசியபின்பு, மீண்டும் 2004-ல் தினமணி தீபாவளி மலருக்காக விரிவாகப் பேசியிருக்கிறார். கறாரான பதில்களும் தீர்க்கமான சிந்தனையும் ஜெயகாந்தன் அடிக்கடி இப்படிப் பேசவேண்டும் என்று எண்ண வைக்கின்றன. சில பதில்கள் மகச்சுருக்கமாக அமைந்து, இன்னும் இது பற்றிப் பேசியிருக்கலாமே என்று யோசிக்க வைக்கின்றன.
அவற்றுள் சில இங்கே.
=============================================================
கேள்வி: வீரப்பனைச் சுட்டுக்கொன்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமாரும் முதல்வர் ஜெயலலிதாவும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், இது நிரந்தரத் தீர்வு அல்ல.
கேள்வி: வீரப்பன் கொல்லப்பட்டதற்கு மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனக்குரல் எழுப்பியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சமூகச் சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களுக்கு அரசாங்கத்தாலும் போலீஸாராலும் சட்டத்தாலும் சகமனிதர்களாலும் இழைக்கப்படும் தீமைகளுக்கு நிவாரணம் காண்பதே மனித உரிமை. இந்த உரிமை, சமூகச் சட்டத்துக்கே அப்பாற்பட்ட வீரப்பனுக்குப் பொருந்தாது.
மனித உரிமை பேசுபவர்கள் முதலில், ஆயுதங்கள் மூலம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தாந்தத்தை ஒழிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். அவர்கள் ஏன் சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்? இந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள் எவரும் சமூக விரோதிகள் அல்லர்.
சமூக மாற்றத்துக்கு, முதலில் சமூக விரோதிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதைத்தான் காந்திஜி செய்தார்.
எனக்கு வீரப்பனைக் கொன்று பிடித்ததே சம்மதம். அவனுக்கும் அதுதான் பெருமை. வீரப்பனை உயிரோடு பிடித்துச் ச்சித்திரவதை செய்திருந்தால் அங்கே மனித உரிமை வராது… அப்படித்தானே! அவனை வீர சொர்க்கத்திற்கு அனுப்பியதால் இவர்கள் புலம்புகிறார்கள்.
கேள்வி: தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததற்கு நீங்கள் யாருக்கு “கிரெடிட்” கொடுப்பீர்கள்?
பதில்: இந்த வீணான காரியத்துக்கு யார் முயற்சி செய்தார்களோ அவர்களுக்கே இந்த வீணான பெருமையும் போய்ச் சேரட்டும். நான் இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. தமிழ் செம்மொழியாக இருப்பதற்கு என்னாலான காரியங்களைச் செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.
கேள்வி: தமிழுக்குச் செம்மொழி, சேது சமுத்திரத்திட்டம் போன்ற நெடுங்காலக் கோரிக்கைகள் தில்லியில் தமிழகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கால்தான் நிறைவேறின என்று கருதுகிறீர்களா?
பதில்: இந்த மாதிரி ஒருமித்த ஒற்றுமை எவர் பேரால் வந்தாலும் அது பலமுடையதாகவே இருக்கும். கருணாநிதிக்குப் பதில் ஜெயலலிதா இருந்தால் இது நடக்காமல் போய்விடுமா என்ன?
இந்தக் கூட்டணி ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும். கூட்டணியின் லட்சியம் தனி ஒரு கட்சியின் குரலாக ஒலிக்குமெனில் கூட்டணி உடைந்துவிடும்.
கேள்வி: தமிழ் சினிமா நாயகர்களிடம் பெருகிவரும் “நாற்காலிக் கனவுகள்” பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: அரசியலுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம்.
கேள்வி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு “வாய்ஸ்” விட்ட ரஜினியும் தேர்தலுக்குப் பிறகு கள்ளக்குறிச்சியில் “வாய்ஸ்” கிளப்பிய விஜயகாந்தும் தமிழக அரசியலில் ஒரு சக்தியாக இருக்கிறார்களா… இருப்பார்களா?
பதில்: அவர்களெல்லாம் இருக்கவும் முடியாது; இருக்கவும் கூடாது.
கேள்வி: எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவில்லையா.. அதுபோலத்தான் இவர்களும் என்று சிலர் வாதிடுகிறார்களே..?
பதில்: எம்.ஜி.ஆர். மாதிரி அல்ல இவர்கள்.
கேள்வி: இவர்கள் எங்குச் சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறதே?
பதில்: கூட்டம் ஓட்டு அல்ல.
கேள்வி: பகவத்கீதை சர்ச்சையில் உங்கள் நிலை என்ன?
பதில்: பகவத்கீதையைச் சூழ்ச்சி என்பாரோடு எனக்கு உடன்பாடில்லை.
இந்தியாவில் இருக்கும் எல்லாரும் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா? யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது உலகப்பொதுநூல். அவ்வாறே பகவத்கீதையும். இது புரியாதவர்களுக்குப் பிறர் மரியாதையும் தெரியாது; சுயமரியாதையும் கிடையாது.
எல்லோரையும் ஒன்றுபடுத்துவதுதான் இயக்கம். பேதப்படுத்துவது இயக்கத்துக்கு எதிரானது.
கேள்வி: ஒரு கூட்டத்தில், “ஜெயமோகன் என் ஆசான்” என்று நீங்கள் ஒரு பொருளில் சொல்ல, அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு சிலர் “ஜெயமோகனின் லேட்டஸ்ட் சிஷ்யர் ஜெயகாந்தன்” என்று எழுதினார்களே… கவனித்தீர்களா?
பதில்: எனக்கு ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் பொருள் தெரியவில்லை. ஜெயமோகனின் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அந்தப் பொருள் தெரிந்தது. தெரியாததை அவர் மூலம் தெரிந்துகொண்டதால், எனக்கு அவர் ஒரு வகையில் ஆசான் என்று சொன்னேன்.
என் காலத்தில் எவ்வளவோ எழுத்தாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்குப் புகழ்ச்சியான கருத்துகளும் உண்டு. ஆனாலும் அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. ஜெயமோகன் அந்த வேலையைச் செய்திருக்கிறார். நான் செய்ய விரும்பி, செய்யாத காரியத்தை அவர் செய்திருக்கிறார். அதனால் அவர் மீது ஒரு அபிமானம் வருமல்லவா…? அதனால்தான் அப்படிச் சொன்னேன்.
சில விசயங்களைக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்டால் கூட நான் நன்றியோடு இருப்பேன். இது என் நல்ல குணத்தின் அடையாளமே அன்றி வேறில்லை.
எல்லாரையும் நான் திட்டிதான் கேட்டிருப்பார்கள் போலும். நான் ஒருவரைப் புகழ்ந்து பேசுவது மற்றவர்களுக்குப் பொறாமையாகவும் இருக்கக்கூடும்.
கேள்வி: தமிழில் என்ன படித்தீர்கள்?
பதில்: கி.ரா.வின் முன்னுரைகள் படித்தேன்.
ஜெயமோகன் அவரது “ஏழாம் உலகம்” புத்தகத்தை எனக்கு அர்ப்பணித்திருந்ததால் அனுப்பியிருந்தார். அதையும் படித்தேன்.
கேள்வி: “ஏழாம் உலகம்” எப்படி இருந்தது?
பதில்: நோ கமெண்ட்ஸ்.
கேள்வி: அப்படியென்றால்…?
பதில்: ஒரு பேட்டியில் சொல்வது போலக் கருத்து ஏதும் இல்லை.
==================================================================
[இந்தப் பேட்டியில் இடம்பெற்றிருந்த இன்னும் சில கேள்விகளை இந்தச் சுட்டியில் காணலாம். முழுவதும் படிக்கவேண்டுமானால் தினமணி தீபாவளி மலர் வாங்கவும். 🙂 ]
இன்னும் பல கேள்வி-பதில்களைக் கொண்டிருக்கிறது ஜெயகாந்தனின் பேட்டி. அரசியலுக்கு எங்கிருந்து, யார் வேண்டுமானாலும் வரலாம் என்றவர் உடனே ரஜினியையும் விஜயகாந்தையும் நிராகரித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மாதிரி அல்ல அவர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே அரசியலையும் சேர்த்துச் செய்யும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறார் என்று கொண்டால், இப்போதைய அரசியல் சூழலில், இதுவரை எந்தவொரு கட்சியிலும் நேரடி அரச்¢யல் செய்யாத எவரும், விஜய்காந்த் மற்றும் ரஜினி உட்பட, அரசியலுக்கு வருவதில் பெரிய தவறேதுமில்லை என்பதே என் எண்ணம். 🙂
ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை முற்றிலும் ஜெயகாந்தன் நிகாரித்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. ஜெயமோகனின் மற்ற நாவல்களில் உள்ள வீச்சும் ஆழமும் அடர்த்தியும் ஏழாம் உலகத்தில் இல்லையென்றாலும் படித்த முடித்தவுடன் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி வைக்கும் நாவல் என்கிற வகையிலும் அதன் காட்சி இதுவரை எந்த ஒரு நாவலும் இவ்வளவு விஸ்தாரமாகப் பதிவு செய்யாதது என்கிற வகையிலும் ஏழாம் உலகம் புறக்கணித்தக்கதல்ல என்பது என் எண்ணம்.
சில கவிதைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. எப்போதும் நன்றாக இருக்கும் அ.வெண்ணிலாவின்கவிதைகள் இந்தமுறை (நதி) கவனத்தை ஈர்க்காமல் வேகவதி நதியின் அவலத்தைப் பற்றிச் சொல்கிறது. மற்றக் கவிதைகளும் இத்தகையனவே.
அசோகமித்திரன் எழுதியிருக்கும் (“இருமுடிவுகள் கொண்டது”) சிறுகதை, தலைப்பையும் கதை செல்லும் பாதையையும் வைத்து முடிவை யூகிக்கக்கூடியதாகவும், கதை சொல்லும் திறனிலும் அழகான நடையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போவதாகாவும் இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகளின் தேசம் சிறுகதை, சிறுவயதில் வேலைக்குச் செல்லும் ஒரு சிறுவனின் வலியைச் சொல்லும், அநேகம் முறை அரங்கேற்றப்பட்டுவிட்ட கதைக்களந்தான் என்றாலும், அதன் நடையில் தேறுகிறது. “சொல்லாமல் பெய்யும் மழை” ‘அத்தைப்பாட்டி’க்கதை. கசப்புக் குப்புசாமியின் மொழிபெயர்ப்புக் கதையும் (கண்ணீர்ப்பசு) வறுமையை அதீதமாகச் சொல்லி செயற்கைத்தனத்தை மட்டுமே கொண்டுவருகிறது.
தீபாவளி மலரின் கட்டுரைகளில் மிக முக்கியமானதும் ஆழமாக அலசப்பட்டிருப்பதும் ஆ.இரா.வேங்கடசலபதியின் “பாரதி எழுதத்தவறிய எட்டயபுரம் வரலாறு”. பாரதி எட்டயபுரம் ஜமீனுக்கு “வம்சமணி தீபிகை”யைப் (எட்டயபுரம் வரலாற்றைச் சொல்லும் நூல்) புதுக்கித் தர இசைந்து அதற்காக கைம்மாறு வேண்டும் கடிதத்தையும், “வம்சமணி தீபிகை”யும் முன்வைத்து அதைச் சுற்றி ஆராயப்பட்டிருக்கும் கட்டுரை வடிவம் இது. ஆகஸ்ட், 6, 1919-ல் எழுதியிருக்கும் அக்கடிதத்தில், எட்டயபுரம் ஜமீனை “சந்நிதானம்” என்றும் “கைம்மாறு விஷயம் சந்நிதானத்தின் உத்தரவுப்படி” என்றும் “சந்நிதானத்தை” விளிக்கும்போது “ஸ்ரீமான் மகாராஜ ராஜ பூஜித மஹா ராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா” என்றும் எழுதுகிறான் பாரத்¢. “சின்னச் சங்கரன்” கதையை “வம்சமணி தீபிகை”யின் பகடி நூலாகக் காட்டும் கட்டுரையாசிரியர், பாரதி பின்னாளில், அதே “வம்சமணி தீபிகை”யைப் புதுக்கித் தர இசைந்ததும், அதற்காகக் கைம்மாறு வேண்டியும், “சந்நிதானம்” என்றும் விளித்தும், அரசாங்க பாடசாலைகளில் அதைக் கல்வியாக வைக்கலாம் என்று ஆசை வார்த்தை சொல்லியும் நிற்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அதே கடிதத்திலும், அந்தச் சூழலிலும், பாரதியின் “வரவழைத்துக்கொண்ட” பணிவையும் மீறி அவனது நம்பிக்கை வெளிப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். [பாரதி, “தமிழ் மொழிக்கொரு மேன்மையும் பொருந்திய சரித்திர நூலும் சமையும்” என்கிறான்.] “வம்சமணி தீபிகை” பாளையக்காரர்களைக் கொள்ளைக்காரர்களாகச் சித்தரித்து, கும்பினிக்காரர்களால் இந்தியா பெற்ற மேன்மையைப் போற்றும் விதமாகச் “செய்யப்பட்ட” ஒரு வரலாற்று நூல். ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்கும் அந்நூலைப் புதுக்கித் தரவே பாரதி முன்வந்திருக்கிறான். அதைச் செய்யாமல் போனது பாரதியின் அதிர்ஷ்டமா, அல்லது அவன் சொன்னது போல் தமிழ்மொழிக்கொரு “மேன்மையும் கீர்த்தியும் தரும்” ஒரு வரலாற்று நூல் அவனால் எழுதமுடியாமல் போனது துரதிர்ஷ்டமா என்பது விடைகாணமுடியாத கேள்வி. கட்டபொம்மனைப் பற்றி எங்குமே குறிப்பிடாத பாரதி இந்நூலை எழுதியிருந்தால் அக்குறை நீங்கியிருக்கும் என்றும் சொல்கிறார் கட்டுரையாசிரியர். மிக நல்ல கட்டுரை.
கணபதி ஸ்தபதியின் செவ்வி, வடநாடு என்பது வட இந்தியா இல்லை என்றும் அது தமிழ்நாடே என்றும் சொல்கிறது. வரலாறு என்பது குமரிக்கண்டத்திலிருந்து எழுதப்படவேண்டும் என்றும் அதனால் தமிழ் முதன்மை பெறும் என்றும், வரலாறு “பிரளயத்திற்கு முன், பிரளயத்திற்குப் பின்” என்றே வகைப்படுத்தப்படவேண்டும் என்கிறது. கடவுளைப் படைத்த பெரும் விஞ்ஞானியாக மயன் முன்வைக்கப்படுகிறார். மயனை முன்வைத்தே அவரது வேலைகள் நடைபெறுவதாகவும் மயனுக்கு நினைவுமண்டபம் எழுப்புவதும் பெரியாருக்குச் சிலை வைப்பதும் அடுத்தக்கட்டத் திட்டமாகச் சொல்லும் ஸ்தபதி, அவரது கைவண்ணத்தில் அமைந்த “வள்ளுவர் கோட்டம்”, “திருவள்ளுவர் சிலை”, “பூம்புகார் மணிமண்டபம்” ஆகியவற்றிற்கு ராயல்டி கேட்கிறார்! இது எத்தனைத்தூரம் சரி என்பது புரியவில்லை. கருணாநிதிக்காவும் திருவள்ளுவருக்காகவும் காசு வாங்காமல் வேலை செய்ததாகச் சொல்லும் ஸ்தபதி இப்போது ராயல்டி கேட்பது சட்டரீதியாகச் சரியானதுதானா என்பது தெரியவில்லை.
தீபாவளி மலரில் ஓவியர் பத்மவாசனின் கைவண்ணத்தில் ஹிந்துக்கடவுளர்களின் ஓவியங்கள் இருக்கின்றன. திருமணியின் புகைப்படக்களஞ்சியம் மக்கள் மறந்துபோன, மறந்துகொண்டிருக்கின்ற, கைவிட்டுக்கொண்டிருக்கிற பழங்காலப் பழக்கங்களையும் கருவிகளையும் கண்ணுக்குத் தருகிறது. சில ஓவியங்கள் வெகு அழகு. வண்ணத்தில் பார்க்கக்கிடைத்தால் மிக அற்புதமாக இருந்திருக்ககூடும். இணையத்தில் இப்புகைப்படங்களைத் “தினமணி” வெளியிடுமா எனத் தெரியவில்லை. அடுப்புக்கரியால் பல்துலக்கும் பெண்மணியும், ஒரு பக்கம் மட்டுமே தட்டுகொண்ட தராசும் (தூக்கு), நடப்பட்டிருக்கும் குச்சிகளில் அலுமினியப்பாத்திரங்கள் காயும் அழகும், கல்லால் வடிவமைக்கப்பட்ட திரிகை (துவரை, பச்சைப்பயறு, உளுந்து போன்றவற்றை உடைக்கப் பயன்படும் கருவி)யும் பழைய நினைவுகளை நமக்குள் எழுப்பிவிடுகின்றன.
எல்லாவற்றையும் கலந்து எல்லாத்தரப்பையும் திருப்தி செய்யும் நோக்கில் செயல்பட்டிருப்பது புரிந்தாலும், நடிகர்களுக்குத் தரப்பட்டிருக்கும் அதிகப் பக்கங்களைக் குறைத்து, இன்னும் கொஞ்சம் கூடுதல் பக்கங்களை இலக்கியத்திற்கு ஒதுக்கியிருக்கலாம்.