நாகலிங்கமரம் – கவிதை

பறிக்கப்படாமல்

உதிர்ந்து

தரையெங்கும் பரவி

வாடிக்கிடக்கும் நாகலிங்கப்பூக்கள்

முனங்கி நிறைக்கின்றன

தினம் பூப்பறிக்கவரும் கிழவனின்

மூச்சுக்காற்றின் வெற்றிடத்தை.

இருந்த இடத்தில் படுத்துக்கொண்டு

கடனெனக் குரைக்கும்

செவலைநாய்க்கு

இனி உறக்கத்தடை இருக்காது.

பாம்புகள் புழங்கும்

மரப்பொந்தினுள்ளிருக்கும்

கிளிக்குஞ்சுகள்

விடலைப்பசங்களுக்குக் கைக்கெட்டும்

எந்தவொரு திட்டுமில்லாமல்.

அந்நாகலிங்கப்பூமரத்தில் சாய்ந்திருக்கும்

ஏணியின் படிகளில்

இப்போதிருக்கும் கிழவனின் கால்தடம்

மெல்ல காற்றில் கலக்கும்.

தொண்டர் நயினார் கோவில் பூசாரி

ரெண்டு நாள் தேடுவான்

நாகலிங்கப்பூவுக்காக கிழவனை.

அக்கிழவன்

அப்பூமரத்தை

இரவுகளில் சுற்றுகிறான் என்று

ஒரு கதை கிளப்பி வைப்பேன்,

ஏதோ என்னாலானது.

Share

Comments Closed