[1]
கட்டுகளின்றி எழுதப்போகிறேன்
கவிதையாக இல்லாமல்
கட்டுரையாகவோ கதையாகவோ இல்லாமல்
யாருக்கேனும் பதில்களாய் இல்லாமல்
சுவரில் கிறுக்கும் சிறுகுழந்தைபோல
மருதாணி, கருநாவல்பழம்
புல்லாங்குழல், சிப்பி என
ஒன்றுக்கொண்டு தொடர்பில்லாத
வார்த்தைகளாய்.
[2]
காற்றுவெளியில்
வெயிலில் மழையில் நனைந்தபடி
அலைந்துகொண்டிருக்கிறது
இன்னும்
புரிந்துகொள்ளப்படாத
என் அன்பு
என்னைப் போலவே தனிமையாய்
எதிர்நிற்க முடியாத அகங்காரத்துடன்
தீச்சுவாலையென எரியும் ஆணவத்துடன்
மிகுந்து ஒலிக்கும் தன் ஆகிருதியுடன்.
[3]
இரண்டு கூழாங்கற்கள்
உரசி உண்டாகும் நெருப்புப்பொறியின்
சந்தோஷத்தைத் தருவதில்லை
அரற்றி எரியும் தீப்பந்தம்
ஒரு மின்மினிக்கு ஈடாவதில்லை
சூரியன்
சோப்புக்குமிழி
மறையுமுன்
சொக்க வைத்துவிடுகிறது
இப்படியாக
இவ்வுலகில்
என் சிறிய ஆளுமை
அதற்கான மகோன்னதத்துடன்.
[4]
பிஞ்சுக்குழந்தையின் உள்ளங்கைச் சூட்டை
சேமித்துவைத்து
பின்னொருநாளில் வழங்கமுடிந்தால்
அப்போது புரியும்
தொலைத்தவற்றின் பட்டியல்
தொலைத்தவற்றின் தொன்மை
-oOo-