குறும்பா முயற்சி

ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் தமிழின் கவிதைப் பரப்பை அதிகப்படுத்தியது என்றால் மிகையில்லை. அவரின் குறும்பாக்கள் நகைச்சுவையுணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததாகவே நான் காண்கிறேன். அதேசமயம் தீவிரமான சிந்தனயைத் தூண்டுவதாகவும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அ.யேசுராஜாவின் பத்திகளின் தொகுப்பான “தூவானம்”-ல் மகாகவியைப் பற்றியும் அவரின் குறும்பாக்கள் பற்றியும் அப்புத்தகத்தில் எஸ்.பொன்னுத்துரை எழுதிய முன்னுரையில் சில வரிகளையும் குறித்துள்ளார். அதைப்பற்றி பின்னொரு சமயம். (புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தவர் லண்டன் பத்மநாப ஐயர். அவருக்கு நன்றி பல.)

உருத்திரமூர்த்தியின் குறும்பா இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நானும் சில குறும்பாக்கள் முயன்றேன். அவை இங்கே.

-oOo-

ஓடிப்போய்த் தாலிகட்டிக் கொண்டு

ஓயாமல் புலம்பியபெண் மண்டு

வாடிப்போய் வந்தாள்;

கைபிடித்துச் சொன்னார்

“நாடியிலும் பொட்டயேதான்” எண்டு.

-oOo-

மஞ்சசட்டைப் போட்டிருந்த மாக்கான்

திறந்தவாய் மூடாமல் பாக்கான்

பஞ்சுவெச்சு செஞ்ச

பேரழகி மூக்காள்

தஞ்சமென்றால் முத்தமிடக் கேப்பான்

-oOo-

ஊசியிட்டார் டாக்டரவர் வாலி

பின்னறிந்தார் வந்தோன்பர்ஸ் காலி

காசில்லாக் கோபமதை

மறந்துடனே மீண்டாரே;

மாசில்லை வாலியவர் போலி!

-oOo-

கடும்பூட்டைத் தேர்வானக் கள்ளன்

தேறுமார்க்கம் கேட்டாலோ சொல்லன்

படம்காணும் நேரம்தன்

சாவிவிட, கிடந்தானே

மடத்தினில், வேறுவழி யில்லன்

-oOo-

காவியமென்(று) உரைத்தாரப் புலவர்

எதிராய்வாய் திறந்தோரோ சிலவர்

பூவோடு பணம்பழமும்

எடுத்துச்சென்று பார்த்தபின்,இப்

பூவுலகில் எதிர்ப்போரே இலவர்!

-oOo-

கற்கடையில் கூட்டமோ கூட்டம்

அவனுக்கோ கள்ளிலிலை நாட்டம்

சொற்சுருக்கி இடுப்பசைத்து

சிரித்துவந்தாள் சிங்காரி;

பல்தெரிய பின்னெடுத்தான் ஓட்டம்!

-oOo-

முதல்வகுப்பில் சந்தைபோல் சத்தம்

இன்றல்ல நேற்றல்ல நித்தம்

புதிதில்லை நெடுநாளாய்

ஆசிரியர் அவருக்குண்டு

கதியில்லாப் பெண்ணோடு பித்தம்

-oOo-

Share

Comments Closed