மௌனத்திலுறைந்து – கவிதை


மௌனத்தினாலான பெண்ணொருத்தியின்

உயிர்த்தழுவலுக்குப்பின் தொடர்ந்த தினங்களில்

என் விளையாட்டின் விதிகள் மாறி மாறி

குரூரமாகிப் போய்க்கொண்டேயிருக்கிறது, அவளென்னவோ

எப்போதும்போல் மௌனத்தையெல்லாம் திரட்டிஒரு சிரிப்பாக்கி.

உள்ளமுடையும் நிமிடமொன்றில்

முகம் சிவந்து

சினந்து

வெடிக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும்போது

விழுதுகள் கொண்டு அடங்கிவிட்ட

மரத்தையொத்த புன்சிரிப்பு

ஆற்றாமையின் உச்சத்தில்

பெருந்தவிப்போடு

அடுத்த விதி மீறல் பக்கத்தில் நான்,

அதையும் வெல்லும் மௌனத்தைப் பயிலும் யோகத்தில் நீ.

எல்லா மௌன மரங்களிலும்

பறவைகளேனும் சப்திக்கின்றன என்பதறிவாயா நீ

நான் வெல்லும் நீ தோற்கும்

மகிழ்ச்சியும் பயமும் புணரும் அவ்வுச்சிப்புள்ளிக்கு

செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன், என்றேனும்

தாங்கவொண்ணாத விளையாட்டில்

நீ வெடித்துச் சிதறும்போது

அவ்வெம்மையின் இம்மியையேனும் தாங்கும் வல்லமை தா

சக்தி அல்லது நீயேயேனும்.

Share

Comments Closed