மனனமாகிப்போன சில பொழுதுகள் – கவிதை


மரச்செறிவுகளுக்குள்ளே சூரிய ஒளி வந்து வந்து

போய்க்கொண்டிருந்த ஒரு நேரத்தில்

கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஓடை நீரை

அளந்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்.

பின்னொரு

கடற்கரை நுரைதள்ளிய நாளில்

ஒரு குமிழை ஊதிப் பெரிதாக்கி

மனதுள் வெடிக்கச் செய்துகொண்டிருந்தேன், கொண்டிருந்தாய்

பலா காய்ச்சித் தொங்கும் மரத்தடியில்

பலாவை எண்ணிக்கொண்டிருந்தோம், கிரிக்கெட் பந்து பட்டு

மரம் சப்தமிட்டு அமர்ந்தது

உதிரும் இலைகள் உதிர்ந்து அமைந்தன

நம்மைப் பற்றிய பிரக்ஞையில்லாமல்.

இரவுகளில்

இடைவெளி குறையும்போதும் கூடும்போதும்

போர்வை நுனி எழுப்பும்போதும்

வீதிகளின் நுண்சப்தங்கள்

நமக்கு மனனம்.

எதையோ இழந்து

எதையோ வாங்கிக்கொண்ட பொழுதுகளில்

மிக நுட்பமாக

சுற்றுப்புறத்தையும் அதன் தனிமையையும்

இருவரும் தனித்தனியே உள்வாங்கிக்கொண்டோம்

நீயாவது ஏதேனும் பேசியிருக்கலாமோ

என்ற கேவலுடன்.

Share

Comments Closed