பாட்டன் மரம் – கவிதை

 

பலமாத இடைவெளிக்குப் பின்

சாப்பாட்டுத் தட்டுகள் ஒன்றாய் வைக்கப்படுகின்றன

தொடர்ந்து பரிமாறல்

ஊரில் மாவடு கிடைப்பதில்லை என்கிறான் அண்ணன்

கட்டம் போட்ட சிவப்புப் பட்டை

இஸ்திரிக்காரன் பாழாக்கியதைப் புலம்புகிறாள் அண்ணி

செல்லப்பூனை இறந்தகதை அம்மாவுக்கு, கொஞ்சம் விசும்பலோடு

மூன்றாம் வீட்டுப் பெண் ஓடிப்போன சந்தோஷம் அப்பாவுக்கு

ஐம்பது வருடங்கள் இருந்த புளியமரம் வெட்டப்பட்டு

பாட்டன் நிலம் விற்கப்பட்ட கதையைச் சொல்ல

யாருக்கும் நினைவில்லை (அல்லது துணிவில்லை)

வெந்நீர் அடுப்பில்

அப்புளியமரத்தின் புளியங்குச்சிகள்

எரிந்து சாம்பலாகும்போது

எஞ்சியிருந்த பாட்டன் மனசாட்சி

கருகிப்போகும் வகையறியாமல்

சூடாகிக்கொண்டிருக்கிறது நீர்

Share

Comments Closed