இவ்வுலகத்துக் காலம்
என் கனவு நிமிடங்களால் பகுப்பட்டிருக்கிறது
நடுச்சாமம் முழுதும்
எச்சி ஒழுக அரற்றிக்கொண்டிருந்த பசு
ஈன்றிருக்கிறது
வழியெங்கும்
அழகிய மஞ்சள் வட்ட மலர்களைத் தட்டான் சுற்ற
சூரியகாந்திப்பூ சூரியன் நோக்கியிருக்கிறது
கஷாயம் போலிருக்கும்
முக்கு டீக்கடை சாயா பாலுடன் கனக்க
எப்போதும் கரகரக்கும் ட்ரான்சிஸ்டர்
காதற்பாடல்களை ஒலிக்கிறது
நீர்வற்றிப்போயிருந்த பண்டாரங்குளத்தில்
சில தண்ணீர்ப்பூக்கள் தலைநீட்டியிருக்கின்றன
அங்கு
கலந்துகொண்டிருக்கும் நாயிரண்டைச் சுற்றி
சிறுவர் கூட்டமில்லை, கல்லெறிதல் இல்லை.
பலசாதிச் சிறுவர்கள்
தோள் மேல் கை போட்டுக்கொண்டு
தபாலில்லாத ட்ரவுசருடன்
பள்ளி செல்கிறார்கள்
சொன்னதைக் கேட்கிறது வீட்டு நாய்
சேவற் கூவலுடன் அமைதியில் காலை விடிய
கோயில் மணி மெலிதாய் ஒலிக்கிறது
மனவெழுச்சி நிரம்பிய இரம்மியப் பொழுதொன்றில்
இரவு கவிகிறது
எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.