“என் இனிய தமிழ் மக்களே!” என்று ஆரம்பித்து பாரதிராஜாவிடமிருந்து மீண்டுமொரு சுமாரான (அறுவை என்று மொழிபெயர்த்துக்கொள்ளவும்) திரைப்படம். பாரதிராஜா படம் மாதிரியே இல்லை என்ற ஒன்று மட்டும்தான் உண்மை. வழக்கமான கிராமத்தைத் தேடினால் கிடைக்காது. முழுக்க முழுக்க பணக்காரமயம். பல விஷயங்களை ஒரே திரைப்படத்தில் அமுக்கி வைத்தது போலத் தோன்றுகிறது. பெரும் பணக்காரனொருவனுக்கு கண்ணில் படும் அவனைக் கவர்ந்த பொருள்களைத் திருடும் வியாதி, கூடவே கிட்டத்தட்ட சைகோ. முதல் வியாதியை வைத்து முதல் பாதி. இரண்டாவதை வைத்து இரண்டாவது பாதி. இரண்டுக்கும் முடிச்சுப் போட ஓர் ஒருதலைக்காதல்.
சிண்ட்ரல்லாவாக தன் காதலியைப் பார்க்கும் ஒருவன், அவள் தன்னை விரும்பாதபோதும் தொடர்ந்து காதலிக்கிறான். காரணம் சிண்ட்ரல்லா அவனை வெறுக்கமாட்டாள் என்று மிக உறுதியாக நம்புகிறான். குணா அபிராமி மாதிரி. சிவப்புரோஜாக்கள், ஆளவந்தான் வாசனை லேசாக வீசுவது போல் தோன்றும் கதை. இதையெல்லாம் கொண்டு வருவதற்காகவே சொருகப்பட்ட மாதிரி வைரம் தொலையும் முதல் கதை. எல்லாவற்றையும் எப்படியாவது இணைத்துத் தைத்துவிடுவதில் மும்முரம் காட்டிய இயக்குநர் படம் பார்ப்பவர்களை மறந்துவிட்டார்.
ஆளை விடுங்கடா சாமி என்று ஓடாமல் உட்கார வைத்த விஷயங்கள் இரண்டு.
ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. இன்னொன்று கண்ணனின் ஒளிப்பதிவு.
பாரதிராஜா படம் மாதிரி இல்லை என்று சொல்ல வைத்தது இந்த இரண்டும்தான். கண்ணனின் ஒளிப்பதிவு ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கி விடுகிறது. ஒளிப்பதிவின் கோணங்களும் தரமும் அசத்தல்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் என்னுயிர்த்தோழியே பாடல் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்களுள் ஒன்றாக அமையலாம். அனார்கலி பாடலும் நன்றாக இருக்கிறது. மற்றப் படங்களைப் போலல்லாமல் பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியிருப்பதை உணர முடிகிறது.
சுஜாதா வசனம் எழுதியிருக்கிறார். கதாநாயகனை (வசீகரன் என நினைக்கிறேன்) நிருபர்கள் கேள்வி கேட்கும்போது சொல்லும் பதிலில் மட்டும் சுஜாதாவைப் பார்க்க முடிகிறது. மற்ற இடங்களில் அவரைத் தேட ஒரு லென்ஸ் வேண்டும்.
கதாநாயகன் தமிழைப் படுத்துகிறார். அவர் நடிக்க முயலும் போதெல்லாம் நமக்கு மூட்-அவுட் ஆகிறது.
இசையும் ஒளிப்பதிவும் கைதுசெய்துவிடுகிறது. என்னுயிர்த்தோழியே பாடலை எழுதியது யார் என்று தெரியவில்லை. அறிவுமதியா? (அறிவுமதியின் சாயல் இருக்கிறது பாட்டில்.)
பி.கு. #1: அருவிகள் மேலே நோக்கிப் பாய்கிறதே என்ற வரியில் அருவியை மேலே நோக்கிப் பாய வைத்து புளகாங்கிதத்தை ஏற்”படுத்துகிறார்” இயக்குநர்.
பி.கு. #2: ஒரு சில இடங்களில் ஆங்கிலத்தில் வசனம் வந்த அடுத்த விநாடியே தமிழிலும் சொல்லி, நாம் பார்ப்பது தமிழ்ப்படத்தைத்தான் என்று ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.
பி.கு. #3: சுஜாதா அதிகம் பில்ட்-அப் கொடுத்துவிட்டார்.