ஓ திராவிட்!


“It was a very big disappointment not to complete my double century, especially when I was so close to it”

“Though I was fully aware of it, the declaration came as a surprise to me. What I knew was that we were going to give the Pakistanis an hour to bat before stumps.”

“It was surprising to see Rahul declare the innings as soon as Yuvraj got out. I checked with the umpires and they confirmed the declaration”

“What is the point in discussing the matter after the declaration has been made by the captain?”

–Sachin Tendulkar.

ஓ திராவிட்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் இருக்கும்போது கேப்டன் ராகுல் ட்ராவிட் (கங்கூலி காயத்தால் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. அதனால் அதற்குப் பதிலாக ராகுல் ட்ராவிட் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்) ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இது சில சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியர்களில் கவாஸ்கரும் ராகுல் ட்ராவிட்டும் இதுவரை நான்கு இரட்டைச் சதங்களை எடுத்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் இந்த இரட்டைச் சதத்தை எடுத்திருப்பாரானால் அவரும் இவர்களோடு இணைந்திருப்பார். எல்லோருமே சச்சினின் இரட்டைச் சதத்தை எதிர்பார்த்திருந்தார்கள். ஏனென்றால் இந்த டெஸ்ட்டில்தான் வீரேந்திர சேவாக் 300 ரன்கள் எடுத்து (309 ஓட்டங்கள், 375 பந்துகள், 39X4, 6X6) புதிய இந்திய சாதனையை ஏற்படுத்தினார். இதுவரை எந்தவொரு இந்திய ஆட்டக்காரரும் 300 ஓட்டங்களைக் கடந்ததில்லை. ஒரே ஆட்டத்தில், அதுவும் பாகிஸ்தானில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக, ஒரு முச்சதமும் ஓர் இரட்டைச் சதமும் எடுக்கப்பட்டிருந்தால் அது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கல்லாக இருந்திருக்கும். எல்லோரும் இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். யுவராஜ் சிங் ஆட்டமிழந்தவுடன் கேப்டன் ராகுல் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டெண்டுல்கரும் தனது அதிருப்தியைப் பின்னர் தெரிவித்தார்.

ஓர் ஆட்டக்காரர் 194 இருக்கும்போது ஆட்டத்தை டிக்ளேர் செய்யுமளவிற்கு இந்திய அணிக்கு நெருக்கடிகள் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. இதுவே நான்காம் நாள் ஆட்டமாக இருந்து, ஆட்டத்தை டிக்ளேர் செய்வதன்மூலம் பாகிஸ்தானை வெல்ல முடியும் என்கிற நிலைமை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டாவது நாளே, அதுவும் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாத நிலையில் (இதைப்பற்றிய காரசாரமான விவாதம் பாகிஸ்தானியர்களிடையே நிலவுகிறது. வேண்டுமென்றே ஆடுதளத்தை பேட்டிங்கிற்குச் சாதகமாக அமைத்துவிட்டதாகவும் அதற்குப்பின் திரைமறைவு இரகசியங்கள் இருக்கிறதென்றும் பலத்த விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன) பாகிஸ்தானை மட்டையடிக்க அழைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பதுதான் என் எண்ணமும். அப்படி அழைக்கப்போவதாயிருந்தால் அது பற்றிக் களத்தில் இருக்கும் ஆட்டக்காரரிடம் தெரிவித்திருக்கவேண்டியது அவசியம். அதுவும் அந்த ஆட்டக்காரர் 200 ஐ நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அதுவும் அந்த ஆட்டக்காரர் சீனியர் என்கிற போது இது பற்றி அவரிடம் முன்பே சொல்லியிருக்கவேண்டியது அவசியமாகிறது. இதை எப்படி ராகுல் ட்ராவிட் கணிக்கத் தவறினார் என்பது புரியவில்லை. இத்தனைக்கும் ட்ராவிட் பொறுமைக்கும் தீவிர அர்ப்பணிப்பு உணர்வுக்கும் எல்லா ஆட்டக்காரர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதற்கும் பெயர்போனவர். ஏதோ ஒரு அவசரத்தில் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட மோசமான முடிவாகத்தான் இதை என்னால் பார்க்கமுடிகிறது.

சகாரா டிவி இந்த முடிவு ட்ராவிட்டால் மட்டும் எடுக்கப்பட்டதல்ல; (காயத்தினால் ஆடாமலிருக்கும்) கங்கூலியுடன் கலந்தாலோசித்தே எடுக்கப்பட்டது என்று சொல்கிறது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ட்ராவிட்டும் கங்கூலியும் பேசிக்கொண்டிருப்பதை க்ளிப்பிங்க்ஸில் காட்டுகிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அவர்கள் இருவருக்கும் தவிர யாருக்கும் தெரியாது என்பதால் சகாரா என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஊடகங்கள் ஆட்டக்காரர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை ஊதிப் பெரியதாக்கி பரபரப்பு ஏற்படுத்த காத்திருக்கிறார்கள். சகாரா டிவியும் அப்படி முயல்கிறது என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.

தனிப்பட்ட ஸ்கோரை விட அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரே முக்கியம் என்ற பேச்சும் இந்த நேரத்தில் எடுபடுமெனத் தெரியவில்லை. அப்படி ஒரு நிலையில் இந்திய அணி இருக்கவில்லை என்பதை கிரிக்கெட்டின் எந்த நிலை இரசிகரும் உணர்வார். குறைந்தபட்சம் இத்தனை ஓவரில் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய தீர்மானித்திருக்கிறோம் என்று டெண்டுல்கரிடம் சொல்வது ராகுல் ட்ராவிட்டின் கடமையாகிறது. அப்படிச் சொல்லியபின் அடுத்த சில பந்துகளில் அவர் 200ஐத் தொட முயன்றிருக்கலாம். அதில் வென்றிருக்கலாம்; தோற்றிருக்கலாம். அது வேறு விஷயம். அப்படிச் செய்திருந்தால் ட்ராவிட்டின் முடிவு இத்தனைத்தூரம் விமர்சனத்திற்குள்ளாகியிருக்காது.

டெண்டுல்கர் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்பதாகவும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டபோது தான் மிகுந்த ஆச்சரியமும் வருத்தமும் அடைந்ததாகவும் கூறியிருக்கிறார். பொதுவாக கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும் என்று தெரிந்திருந்தாலும் தனக்கு அது பற்றிச் சொல்லப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

ராகுல் ட்ராவிட் டெண்டுல்கரிடம் சொல்லிவிட்டு டிக்ளேர் செய்திருக்கலாம் என்பதுதான் என் எண்ணமும். பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருவர் முச்சதமும் இன்னொருவர் இரட்டைச்சதமும் ஒரே ஆட்டத்தில் எடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? ஓ ட்ராவிட்!

Share

Comments Closed