வயசு – சிறுகதை


நீளமான அந்தத் தெருவின் ஒரு முனையில் இருந்து பார்க்கும்போது அடுத்த முனையில் பச்சைப் பசேல் என புற்கள் காற்றில் ஆடுவது தெரிந்தது. நாலு எட்டு வேகமாய் நடக்க முடிந்தால் பதினைந்து நிமிடத்தில், வயற்வரப்புகளைக் கடந்து ஓடைக்குச் சென்று விடலாம். ஓடையில் இப்போது நீர் இருக்குமா எனத் தெரியவில்லை. இப்போதெல்லாம் எத்தனைப் பையன்கள் ஓடைக்குச் சென்று குளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஷவர் இல்லாமல் ஷானு ஒருநாள் கூட குளிக்கமாட்டாள். “தண்ணீரைத் திறந்துவிட்டு, ஷவரில் அக்காடான்னு குளிக்கும்போது ஒரு சுகம் வரும் பாருங்க தாத்தா” என்று சொல்லும்போது அவள் சின்னஞ்சிறு முகத்தில் பரவும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவளிடம் ஓடையில குளிச்சிருக்கியாம்மா என்று கேட்கக்கூட பயம் எனக்கு.அவள் கட்சிப்படி, ஓடை, வயற்காட்டில் நீர் பாய்ச்சுவதற்கும் எருமைகள் குளிப்பதற்கும்தான்.

மிகுந்த பிரயாசையுடன் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தேன். நிறைய வீட்டுக் கதவுகள் பூட்டியே இருந்தன. கோபால ஐயர் கோலோச்சிய காலத்தில், எந்த வீடாவது பூட்டியிருந்தால், பெரும் அக்கறையோடு என்னைத் தேடி வந்து, “அந்த அம்மாஞ்சி நாம நினைச்சா மாதிரி சும்மா இல்லைங்காணும். அவன் பெண்டாட்டி மூணாவதா உண்டாயிருக்கா. அதான் அம்மா ஆத்துக்கு கொண்டு போயி விடப் போயிருக்கான்” என்பார். அம்மாஞ்சி மேல் கோபால ஐயருக்கு எப்போதும் ஒரு கோபம் இருந்துகொண்டே இருந்தது. அம்மாஞ்சியின் மனைவியை கோபால ஐயர் ஒரு தலையாக காதலித்ததாக ஊர்க்கதை உண்டு. ஊர்க்கதைகளுக்கா பஞ்சம். என்னைக்கூட குசும்பி என்று என் காது படவே பேசியிருக்கிறார்கள். கோபால ஐயர் செத்தபோது அந்த அம்மாஞ்சிதான் இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்தான். அதைக் கோபால ஐயரிடம் சொல்ல முடியாது போன வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது.

நான் தெருவில் நடக்கிறேன் என்பதே என்னாலேயே நம்ப முடியவில்லை. தனியாக நடக்கமுடியும் என்ற நம்பிக்கை போன பிறகு நடமாட்டம் எல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான். வெளியில் இறங்கினாலே ஒப்பாரி வைப்பாள் காமாட்சி. வெளியில் பெண்ணெடுத்தால் மாமனாரை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ள மாட்டாள் என்று சுற்றம் எல்லாம் சொன்ன போதும் ஒரு காலில் நின்று விக்கிக்கு அவளை மணமுடித்துவைத்தேன். விக்கிக்கு காமாட்சிமேல் ஒரு பிரியம் இருந்தது எனக்குத் தெரியும். ஊர்வாயை அடைக்கிற மாதிரித்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடிகிறதா என்ன?

சம்சுதீனின் வீடு அடையாளமே தெரியாமல் மாறிவிட்டிருக்கிறது. சம்சுதீன் இறந்த போது அவன் மனைவியிடம் சென்று துக்கம் விசாரிக்கக் கூட முடியவில்லை. நான் செல்லவேண்டுமானால் துணைக்கு யாராவது வேண்டும். விக்கி அவனே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். சம்சுதீன் இறந்த அன்று அவன் குடும்பம் இனிமேல் எப்படி வாழுமோ என்று அத்தனை வருத்தப்பட்டேன். சின்ன வயதிலிருந்தே என் கூட ரொம்பப் பிரியமாக இருந்தவன் அவன் தான். அவன் பிள்ளைகள் யாருமே ஒழுங்காகப் படிக்காமல் ஊர்சுற்றியாக இருப்பதை நினைத்து எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பான். “அஞ்சை பெத்தததுக்கு விக்கி மாதிரி ஒருத்தனைப் பெத்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்” என்று அவன் புலம்பும்போது சங்கடமாக இருக்கும். திடீரென ஒரு நாள் முஸ்தபா வேலைக்கு சவுதி போவதாக வந்து சொல்லிவிட்டுப் போனான். சம்சுதீன் உயிரோடு இருந்த காலத்தில் முஸ்தபா மேல் தனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று என் நேர்படவே சொல்லியிருக்கிறான். “முஸ்தபா எப்போதும் வாப்பாவை எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறான்” என்று சம்சுதீனின் மனைவி நூர்ஜஹான் எத்தனையோ முறை சொல்லி அழுதிருக்கிறாள். இப்போதிருக்கும் வீட்டைப் பார்க்கும்போது முஸ்தபாவை நினைத்துச் சந்தோஷப்படத்தான் தோன்றுகிறது. என்னவோ அப்போதிருந்தே விக்கி மாதிரி எனக்கு முஸ்தபா மேலும் ஒரு அன்பு. இது சம்சுதீனுக்கும் தெரியும்.

அடுத்தது முதலியார் வீடு. பெருமாள்நாயகம் முதலியாருக்கும் எனக்கும் பம்பரம் விளையாடும் காலத்திலிருந்தே ஆகாது. சரியான கோவக்காரன் அவன். பேச்சு பேச்சாய் இருக்கும்போதே கை நீட்டி விடுவான். என் அப்பாவும் அவன் அப்பாவும் எங்களுக்காக எத்தனையோ தடவை சண்டை போட்டிருக்கிறார்கள். அவனும் அதிக நடமாட்டம் இல்லாமல் படுக்கையில்தான் கிடப்பதாகக் காமாட்சி சொல்வாள். படியேற முடிந்தால் ஒரு தடவை போய்ப் பார்க்கலாம்தான். பெருமாள்நாயகத்தின் மருமகள் காமாட்சி மாதிரி இல்லை. ராங்கி. எதாவது படக்கென்று சொன்னாலும் சொல்லிவிடுவாள். நாளை விக்கி திட்டினாலும் திட்டுவான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

லேசாக மூச்சு முட்டியது. கீழே விழுந்துவிட்டால் அசிங்கம். காமாட்சி திட்டமாட்டாள். ஆனால் அழுவாள். வாய்விட்டு அழுவாள். பார்க்கவே கஷ்டமாக இருக்கும். தெருக்கோடியில் இருக்கும் “மஞ்ச வீடு”க்கு எதிரில் இருந்த புளியமரத்தை வெட்டுகிறார்கள் என்று சொன்னபோது எனக்கு எதையோ இழந்த மாதிரி இருந்தது. யாருக்கும் தெரியாமல் அதைப் பார்க்க போனபோதுதான் முதல்முறையாகத் தெருவில் விழுந்தது. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. விழுந்த வேகத்தில் எழ முயன்ற போது, மீண்டும் விழுந்தேன். “ஐயோ.. தாத்தா விழுந்துட்டார்” என்று அம்மாஞ்சியின் பேரன்தான் கத்திக்கொண்டே ஓடினான். காமாட்சி அழுது புலம்பிக்கொண்டே வந்து என்னைத் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போனாள். அன்றைக்கு முழுவதும் “தொங்கிச் செத்துருவோமா” என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அதுக்குக் கூட யாரையாவது கூப்பிட வேண்டும். பெரியநாயகம் நடமாட்டத்துடன் இருந்தாலாவது அவனைக் கேட்டிருக்கலாம்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நடையைத் தொடர ஆரம்பித்தேன். கோபாலு வீட்டைக் காலி செய்து போன பின்னர் வேறு யாரோ குடிவந்திருக்கிறார்கள். காமாட்சி சொன்ன பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றைக்கு வந்தால் கேட்டு வைத்துக்கொள்ளவேண்டும். அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்குரல் கேட்டது. தெளிவாகப் புரிந்தது. “ஐயோ.. ஷானுவோட தாத்தா தனியா நடக்குறாங்கம்மா”

கைக்கும் காலுக்கும்தான் க்ஷ£ணம். கண்ணுக்கும் காதுக்குமில்லை.

இன்னும் ரெண்டு வீடு தாண்டி விட்டால் என் வீட்டுக்குப் போய்விடலாம். படியேற வேண்டும் என்று நினைத்த போதே கொஞ்சம் பயமாக இருந்தது. உட்கார்ந்து உட்கார்ந்தாவது ஏறிவிடலாம் என நினைத்துக்கொண்டபோது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் தலையில் யாரோ கட்டையால் அடித்த மாதிரி ஒரு உணர்வு. கண் கட்டிக்கொண்டு வந்து, “செத்தேன்” என்றே முடிவுசெய்துவிட்டேன். இரண்டு நிமிடங்களில் தன்நிலைக்கு வந்தேன். கண் இத்தனை இருட்டிக்கொண்டு வந்தும், நான் கீழே விழவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். என் காலுக்குக் கீழே ஒரு கிட்டிப்பில் கிடந்தது. அதை எடுக்க ஒரு சின்னப்பையன் ஓடி வந்துகொண்டிருந்ததையும் பார்த்தேன். குனிந்து நிமிர்வது அத்தனைச் சுலபமில்லை என்றாலும் அவன் வருவதற்குள் கிட்டிப்பில்லைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் பக்கத்தில் வந்து நின்றான். என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தான். தூரத்தில் இருக்கும் மற்ற இரண்டு பையன்களையும் செய்கையால் அழைத்தான். வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பையன்மார்களில் ஒருத்தனையும் அடையாளம் தெரியவில்லை. மூன்று பேரும் புதுப்பையன்கள். ஒருத்தன் ஆரம்பித்தான்.

“தெரியாம பட்டுட்டு.. குடு தாத்தா”

மற்ற பையன்மாரும் சேர்ந்துகொண்டார்கள்.

“ஆமா தாத்தா”

பையன்கள் இன்னும் கிட்டி விளையாடுகிறார்கள் என்பதைக் காணும்போதே சந்தோஷம் வந்தது. நான் ஆடிய காலத்தில் சம்சுதீன்தான் கிட்டி விளையாட்டில் பெரிய ஆள். அம்மாஞ்சி ஆட்டைக்கே வரமாட்டான். கிட்டி விளையாட்டு என்றாலே அவனுக்குப் பயம்.

நான் ” ஏண்டே இதெல்லாம் இன்னும் ஆடுதிகளா?” என்றேன்.

பையன்கள் பதில் சொல்லாமல் கிட்டியை வாங்குவதிலேயே குறியாய் இருந்தார்கள்.

“தெரியாம பட்டுட்டுங்கேன்லா.. குடு தாத்தா”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கடே மொதல்ல. வேறென்னெல்லாம் ஆடுவீக?”

“கிரிக்கெட் ஆடுவோம். இன்னைக்கு பந்து வாங்கக் காசில்லை. அதுதான்.” அவன் குரலில் எரிச்சல் கலந்திருந்தது. இன்னொருத்தன் கொஞ்சம் ரோஷக்காரன் போல.

“பதில் சொல்லியாச்சுல்ல குடு” என்றான்.

“கேள்வி முடியலை. இன்னும் இருக்குடே” என்றேன் கொஞ்சம் நமட்டுடன்.

என் கிண்டல் அவர்களுக்கு இரசிக்கத்தக்கதாய் இல்லை. அனாலும், கிட்டிப்பில் என் கையில் இருப்பதால் மையமாய்ச் சிரித்து வைத்தார்கள்.

“சரி. என்னையும் ஆட்டைக்குச் சேர்த்துக்கோங்க. நான் தர்றேன்” என்றேன்.

“ஐய.. நடக்கவே முடியலையாம். ஆட்டைக்காம்” ஊமைக்கொட்டான் என நான் நினைத்திருந்த ஒரு சிறுவன் பட்டென்று பதில் சொல்லவும், மற்றவன்கள் சிரித்தார்கள்.

“நான் நல்லா விளையாடுவேண்டே. ஒரு தடவை சான்ஸ் கொடுத்துப் பாரு.. அப்றம் பேசு” என்றேன்.

“சரி ஒரே ஒரு ஆட்டைதான். அப்புறம் கிடையாது” என்று ஒரு வழியாய் இறங்கிவந்தார்கள். கைத்தாங்கலாய் அவர்கள் விளையாடும் இடத்துக்குக் கூட்டிப் போனார்கள். எத்தனையோ வருடங்கள் கழித்து கிட்டி விளையாடப் போகிறேன். எனக்குள் சந்தோஷஅலை அடிக்க ஆரம்பித்தது.

“தாத்தா.. இந்தா கம்பு. சட்டுன்னு கெந்து. உன்னை நான் சீக்கிரம் அவுட்டாக்கிடுவேன்”

அவந்தான் கிட்டியில் பெரிய ஆள் போல. சம்சுதீன் மாதிரி. சம்சுதீன் யாரையும் சீக்கிரம் அவுட்டாக்கி விடுவான். கிட்டிப்பில்லை கேட்ச் பிடிப்பான். அல்லது கிட்டிப்பில்லை எறிந்து தாண்டை அடித்துவிடுவான். அல்லது கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து தாண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை லாங் ஜம்ப் மாதிரி தாண்டிவிடுவான். இந்த மூன்றில் எது செய்தாலும் ஆட்டக்காரன் அவுட். இப்போதெல்லாம் என்ன விதி என்று தெரியவில்லை.

“ஏண்டே இதைக் கம்புன்னா சொல்தீய? நாங்க தாண்டும்போம்”

“நாங்க அப்படியும் சொல்வோம்” என்றான் ரோஷக்காரன்,. ஒரு விதக் கிண்டல்தொனியுடன்.

“சரி.. சும்மா விளையாடுங்கன்னு சொன்னா என்னடே அர்த்தம்? ரூல்ஸ் சொல்ல வேணாமா?”

ஊமைக்கொட்டான் ஒப்புவிக்க ஆரம்பித்தான்.

“நீங்க கெந்தும்போது நாங்க கேட்ச் பிடிச்சா அவுட். இல்லைனா கிட்டிப் பில்லை எறிஞ்சு கம்பை அடிச்சாச்சுன்னா அவுட். இல்லைனா ஓடி வந்து கிட்டிப்பில் இருந்த இடத்துலேர்ந்து கம்பு இருக்கிற இடத்துக்குத் தாண்டுவோம். சரியா தாண்டியாச்சுன்னா நீங்க அவுட்” என்று சொல்லிவிட்டு ரோஷக்காரனைப் பார்த்து “சரிதாம்ல?” என்றான்.

பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

” சரி ஒரு வேளை இந்த மூணும் நீங்க செய்ய முடியலைனா…?”

” நீங்க விளையாடலாம். மூணு சான்ஸ். அதுக்குள்ள உயிரடியாவது அடிச்சிடனும்…”

பொறுமை இழந்து போன ரோஷக்காரன், “தாத்தா.. ஆட்டயப் பத்தி உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? ” என்றான். இனியும் சந்தேகம் கேட்டால் ஆட்டைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால், ரொம்ப நாள் கழித்துக் கிடைத்த சந்தோஷம் பூர்த்தியாகாமல் போய்விடும் என்று தோன்றியதால் அமைதியாகிவிட்டேன்.

“சரி.. ஒரு தடவை நீ ஆடு. அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் நான் ஆடறேன்” என்றேன்.

ரோஷக்காரன் அலட்சியமாய் கிட்டியை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு கம்பையும் எடுத்துக்கொண்டு ரொம்ப ஸ்டைலாக நடந்து, சாண் நீளத்திற்குத் தோண்டப்பட்டிருந்த குழிக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு…

“ரெடியா..? கெந்தவா?”

“சீக்கிரம் கெந்துல.. தாத்தாவுக்கு காமிக்கிறதுக்குத்தான.. அவரை சீக்கிரம் அனுப்பிட்டு நாம ஆரம்பிக்கலாம்” என்றான் மூன்றாமவன்.

நீளமான குழிக்குப் பக்கவாட்டாய் குச்சியை வைத்து, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு, குனிந்துகெந்தத் தயாரானான்.

“கெந்தப் போறேன்.. கெந்தப் போறேன்..”

“கெந்துல.. உயிரை வாங்காத” – மூன்றாமவன்.

பின்புறத்தை இடதும் வலதுமாய் இரண்டு புறம் அசைத்துவிட்டு, அழுத்தி ஒரு கெந்து கெந்தினான். கிட்டிப்பில் காற்றில் பறந்து உயரே சென்று கீழே வந்து விழுந்தது. இத்தனை தூரம் சம்சுதீன் கூடக் கெந்தியதாய் நினைவில்லை எனக்கு. மூன்றாமவன் கிட்டிப்பில் விழுந்த இடத்தில் இருந்து, தாண்டைப் பார்த்துக் குறி வைத்து எறிந்தான். ஆனால் அடி படவில்லை. ரோஷக்காரன், “என்னயவே அவுட்டாக்கப் பாக்கியா நீயி! இருலே உனக்கு நான் யாருன்னு காட்டுதேன்” என்ற வசனம் பேசிக்கொண்டு தாண்டை எடுத்துக்கொண்டு கிட்டியை அடிக்க எத்தனித்தான்.

எந்த ஓரத்தில் கிட்டி தூக்கிக்கொண்டு நிற்கிறது எனக் குறிபார்த்து, தரையில் மூன்று முறை ஸ்டைலாய் கோடு போட்டுவிட்டு, அடிக்க, கிட்டிப்பில் வானத்தில் எழும்பியது. அது கீழே விழுமுன் தொடர்ந்து தட்ட, “ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு..சே.. எட்டுத்தானா.. பன்னெண்டாவது அடிக்கணும்னு நினைச்சேன்” என்றான். நான் ஆடிய காலத்தில் மூவடி அடிப்பதே பெரும் சாதனை. இவன் சர்வ சாதாரணமாய் எட்டடி அடிக்கிறான்.

இரண்டாவது முறை கிட்டிப்பில் காற்றில் எழும்ப வில்லை. மூன்றாவது முறை கொஞ்சம் எழும்பியது, ஒரே அடியாக இழுத்து அடித்தான். தூரத்தில் சென்று விழுந்தது.

மூன்றாமவன் ” எத்தனை வேணும்? ” என்றான்.

ரோஷக்காரன் ரொம்ப யோசனைக்கு பின் நூத்தம்பது என்றான். ” சரி எடுத்துக்கோ” என்றான் மூன்றாமவன். ஊமக்கோட்டன் இடையில் நுழைந்து, “இருக்காதுல. அளந்து பார்ப்போம்” என்றான். “சரி அள” என்றான் ரோஷக்காரன். ஊமக்கோட்டன் தாண்டை வைத்து அளந்தான். தாண்டின் நீளத்தில், கிட்டிப்பில் இருக்கும் இடத்தில் இருந்து, குழிக்கு நூற்று இருபது தடவைதான் வந்தது. ஊமக்கோட்டான் ரொம்ப உற்சாகமாகி, “நாஞ் சொன்னேம்லா” என்றான்.

ரோஷக்காரன் “ரொம்ப அல்ட்டிக்காதடே..”என்றான்.

“ஆட்டைப் போச்சா நம்பர் போச்சா”

கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் ரோஷக்காரன் “நம்பர் போச்சு” என்றான். அவன் சொன்ன விதம் படு ஸ்டைல். மீண்டும் அவன் கெந்தப் போனான்.

“நான் எபப ஆட?” என்றேன்.

“தாத்தா ஒரு தடவதான கேக்காரு.. அவர் விளையாடிட்டுப் போவட்டும்” என்றான் மூன்றாமவன். ஒரு வழியாக தாண்டு என் கைக்கு வந்தது.

என்னால் குனிந்து நின்று கெந்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஆசை விடவில்லை. செத்தாலும் சரி என்ற வீராப்பு வந்துவிட்டது எனக்கு. கிட்டிப்பில்லை குழிக்கு பக்கவாட்டில் வைக்காமல் நீளவாக்கிலேயே வைத்தேன்.

“இது ஆட்டையில கிடையாது. ராக்கெட்லாம் விடக்கூடாது” என்றான் ஊமக்கோட்டான்.

“சரி விடுல. தாத்தா எத்தனை தூரம் கெந்துதாருன்னு பாக்கலாம்” என்றான் ரோஷக்காரன்.

நான் பின் பக்கமாய்த் திரும்பி நின்றேன். மூச்சு முட்டியது. ஆசுவாசப்படுத்த கொஞ்ச நேரம் அப்படியே நின்றேன். மனதுக்குள் சம்சுதீன், பெரியநாயகம் எல்லாம் வந்து போனார்கள்.

“சீக்கிரம் கெந்து தாத்தா”

மெல்லக் குனிந்த போது, முதுகின் அடிப்பாகத்தில் இருந்து ஒரு வலி மேலே பரவியது. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்த மாதிரி கூடத் தோன்றியது. அதே மாதிரி அதிக நேரம் இருந்தால், மயக்கம் வந்தாலும் வரலாம் என்று தோன்றவே, சிரத்தையில்லாமல் ஒரு கெந்து கெந்தினேன். கிட்டிப்பில் காற்றிலெல்லாம் பறக்கவில்லை. தரையை உரசிக்கொண்டு கொஞ்ச தூரம் சென்று அமைதியானது. இரண்டு கால்களின் வழியாக உலகைப் பார்த்து நாளாயிற்று. பையன்மார்கள் தலைகிழாகச் சிரித்தார்கள்.

“ஹ்ம். இம்புட்டுதானா? இதுக்குத்தான் இம்புட்டு நேரமா?” என்றான் ரோஷக்காரன். நான் மெல்ல நிமிர்ந்தேன். உடலின் பிடிப்புகளில் இருந்து சொடக்கு விழும் சத்தங்கள் கேட்டது.

” என்ன தாத்தா.. ஓடி வந்து தாண்டிரவா? ” கேட்டுவிட்டுச் சிரித்தான் ரோஷக்காரன். பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. அப்படியே எங்கேயாவது கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் போதும் எனத் தோன்றியது.

“போனா போவட்டும். ஒரு தடவை விட்டுக்கொடுல.. என்ன அடிக்கார்னு பாப்போம்” என்றான் மூன்றாமவன். சரி என்று சொல்லிவிட்டு, என்னை அவுட்டாக்காமல் விட்டுக்கொடுத்தான்.

“தாத்தா.. ஐயோபாவம்னு விட்டுக்கொடுத்துருக்கேன். நல்லா அடிச்சு பாயிண்ட் எடுக்கனும் என்ன?”

“இல்லடே.. என்னால முடியலை. ஆட்ட போதும். நீங்க விளையாடுங்க”

“தாத்தா.. சும்மா ஆடு தாத்தா.. ஐயோ பாவம்னு அவன் விட்டுக்கொடுத்திருக்காம்லா” என்று வக்காலத்து வாங்கினான் ஊமக்கோட்டான். எனக்கும் ஆசை வந்தது. திக்கித் திணறி நடந்து கிட்டிப் பில் அருகில் சென்றேன். இன்னொரு முறை குனிய வேண்டும் என நினைத்தபோது வந்த பயத்தை ஒத்தி வைத்தேன்.

தாண்டைக் கையில் வைத்து, கிட்டிப்பில் எந்த நுனி தூக்கி இருக்கிறது எனப் பார்த்தேன். ஒரு நுனியும் வாகாய் இல்லை. ரொம்ப யோசனைக்குப் பின் அதிகம் குனியாமல், ஒரு நுனியை அடித்தேன். அது மேலெழும்பாமல், மண்ணில் உள்ளே புதைந்துகொண்டது.

“தாத்தா ஒரு சான்ஸ் போயிடுச்சு. இன்னும் ரெண்டு சான்ஸ்தான் இருக்குது” என்றான் மூன்றாமவன்.

இரண்டாம் முறை அடித்த போதும் கிட்டிப்பில் காற்றில் எழும்பவே இல்லை.

“ஐயோ.. உயிரடியாவது அடி தாத்தா.. இல்லைனா அவுட்..”

கையின் மணிக்கட்டில் வலி விண்ணென்று தெரித்தது. கடைசியாய் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று அடிக்க, கிட்டிப்பில் காற்றில் எழும்பி லாவகமாய், தாண்டில் மாட்ட, விசுக்கென்ற சத்தத்துடன் பறந்தது. அதை நானே எதிர்பார்க்கவில்லை.

“தாத்தா பரவாயில்லைல” என்றான் ஊமக்கோட்டான்.

“ஆமால” என்றனர் மற்ற இரண்டு பையன்மார்களும்.

“சரி தாத்தா உனக்கு எத்தனை பாயிண்ட் வேணும் கேளு!”

நான் “நூறு”என்றேன்.

மூன்றாமவன் “ஸ்தூ..” என்று சொல்லிவிட்டு “தாத்தா.. நூறு இருக்காது. அம்பதுதான் இருக்கும். அம்பது கேளு” என்றான். அவனுக்கு என்னைப் பிடித்துவிட்டது போல.

“இல்லை. நூறுதான்” என்றேன். “வேணும்னா அளந்து பாத்துக்கோ”

ரோஷக்காரன் அளந்தான். அம்பத்தெட்டு தாண்டுகள்தான் வந்தது.

“நாந்தாஞ் சொன்னேம்லா..” என்றான் மூன்றாமவன். அவன் கண்ணில் பரிதாபம் தெரிந்தது.

“சரி ஆட்ட போச்சா? நம்பர் போச்சா?” என்றான் ஊமக்கோட்டான்.

நான் “ஆட்ட போச்சு” என்றேன்.

***

இந்தக் கதை சிறப்பு அம்பலத்தில் வெளியாகியது.


 

***

Share

Comments Closed