இறகு
விரையும் வாகனச் சத்தத்திற்குப்
பழகிவிட்டாலும்
என் பெரு ஊளையில்
படபடத்துப் பறக்கும்
செட்டியார் வீசும்
தானியத்திற்குக்
காத்திருக்கும் புறாக்கள்
காற்றில் தூளியாடும்
இறகு கண்டு
மலரும் அம்மாவிற்கு
காதுகுடைய
புறா இறகு
போதை
செட்டியார் செத்தாரா
புறாக்கள் இறந்தனவா
புதிருக்கு மத்தியில்
எந்தக் கவலையுமின்றி
கோழியிறகுக்குப்
பழகிவிட்டாள்
அம்மா