வாழை

வாழை – ஒரே வார்த்தையில் செல்வதென்றால் வாழ்க்கை.

Spoilers ahead.

நல்ல திரைப்படம். திரைக்கதையில் நம்மை இணைக்க சிறுவனின் வாழ்க்கையையும் அவனது நட்பையும் சித்தரித்த விதம் அருமை. இந்த காட்சிகளில் இருந்துதான் நாம் திரைப்படத்துக்குள் நுழைகிறோம். அங்கங்கே கதிர் அருவாள் கம்யூனிசம் என்று ஊறுகாய் போல் காட்டினாலும் படம் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் வலியை விரிவாகப் பேசுகிறது. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லை அறிந்து சிறப்பாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் இரண்டு சிறுவர்கள் அமர்க்களம் செய்திருக்கிறார்கள். கமல் ரஜினி பற்றிய அளவான வசனங்கள் அள்ளிக்கொண்டு போகின்றன.

குறைகளைப் பேசும் நேரம் இதுவல்ல என்றாலும் 90களின் விருதுத் திரைப்பட சாயலைக் கொஞ்சம் தவிர்த்து இருந்திருக்கலாம். கடைசிக் காட்சியில் வரும் அதீத உணர்ச்சியையும் கொஞ்சம் மட்டுப்படுத்தி இருக்கலாம். எதிர்பாராத திடுக்கிடலுக்கு ஏற்ற இதுவும் ஒருவகை யதார்த்தம்தானே என்றால் அதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால் உச்ச காட்சிக்குப் பின்னர் அந்தச் சிறுவன் சாப்பிட அமர்வது கதையைத் தாண்டிப் பயணிப்பது போல் எனக்குத் தனிப்பட்ட அளவில் தோன்றியது.

மணிகண்டனின் திரைப்பட‌ வகையில் மாரி செல்வராஜின் படம் இது.

இப்படத்தில் இசைக்கு காது இளையராஜாவுக்காக ஏங்குகிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தேவா.‌ ஆனாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பூங்கொடிதான் பூத்ததம்மா பாடலின் தொடக்க இசை ஒலித்தபோது எனக்கு இறக்கை முளைத்தது நிஜம். இந்த அவஸ்தையை இயக்குநரும் அனுபவித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

திருநெல்வேலி வட்டாரத் தமிழைக் கொலை செய்யாமல் நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி கிராம வட்டார வழக்கைக் கச்சிதமாக அந்த இரு சிறுவர்களும் இன்னும் முகம் தெரியாத பல நடிகர்களும் பேசுகிறார்கள். கதாநாயக நாயகிகள் வழக்கம்போல் சில இடங்களில் சரியாக திருநெல்வேலித் தமிழையும், சில இடங்களில் வாய்க்கு வந்த தமிழையும் பேசிக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றாலும், முழுமையான அளவில் திருநெல்வேலி வட்டாரத் தமிழ் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலிக்கே உரிய வட்டார வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு.

தங்கலான் எனும் அதீத‌ நடிப்புச் செயற்கைக் காவியம் தந்த ரணத்துக்குக் கொஞ்சம் களிம்பு பூசி இருக்கிறது இந்த யதார்த்தம்.

Share

Comments Closed