வாசலில் நிற்கும் பெண் – கவிதை

சில வருடங்களாய் வாசலில் நிற்கிறாள் அப்பெண்
அதிகாலை வேளைகளில் அவளை உணர்வதுண்டு
அவளின் கண்கள் சதா அலைந்துகொண்டிருக்கின்றன
எதிரிலிருக்கும் புதருக்குள்
அந்த அதிகாலையில் ஓடுகின்றன இரு நாய்கள்
அன்றுதான்
அதிசயமாய்
ஒரு மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
எருக்கம்பூவில் அமரக்கண்டேன்
விடிந்துகொண்டிருக்கும் வேளையில்
வராண்டாவில்
ஒரு நீளமான முடி சுற்றிக்கொண்டிருந்தது
அப்பெண்ணின் கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை
ஸ்டிக்கர் பொட்டுத் தடங்களற்ற குளியலைறை உள்ள என் வீட்டு வாசலில்
குவிந்துகொண்டிருக்கிறது என் கவனமெல்லாம்.

Share

Comments Closed